கோவிட்-19: தள்ளாடும் உலக நாடுகள் – ஒரே நாளில் 1.56 லட்சம் பேர் பாதிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் உலகெங்கும், நேற்று மட்டும் 1.56 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் முதலில் தென்பட்ட, கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகெங்கும் 89 லட்சத்து 50 ஆயிரத்து 489 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதில், நான்கு லட்சத்து 67 ஆயிரத்து 354 பேர் பலியாகி உள்ளனர். வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று மட்டும், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 922 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதற்கு முன்தினம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 874 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இது. அதிக பாதிப்பு மற்றும் அதிக பலியில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு, 2,355,463 பேர்கள் கொரோனாவல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதில், 122,241 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.

அதற்கடுத்ததாக தென் அமெரிக்க நாடான பிரேசிலில், 1,085,038 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு பலி எண்ணிக்கை, 50 ஆயிரத்து, 617 என பதிவாகியுள்ளது. ரஷ்யாவில், 584,680 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு நாளில் மட்டும், 7,728 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை, 8,111ஆக உயர்ந்தது. இந்தியா, பிரித்தானியா உட்பட, 18 நாடுகளில் தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே