கேரள தங்க கடத்தல் வழக்கு… துபாயில் உள்ள பைசல் பரீத்திடம் விசாரணை நடத்த முடிவு: என்.ஐ.ஏ!!

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் அடுத்த நடவடிக்கையாக குற்றம்சாட்டப்பட்ட பைசல் பரீத் என்பவரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவர் துபாயில் உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொள்ள என்.ஐ.ஏ பிரிவு எஸ்.பி உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் துபாய் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, என்.ஐ.ஏ குழு துபாய் வர துபாய் காவல்துறை அனுமதி வழங்கியது.

கேரள தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. கேரள அரசின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர், பி.எஸ். சரீத் உட்பட 12 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் 3ஆவது குற்றவாளியாக கருதப்படும் ஃபைசல் பரீத் மட்டும் துபாயில் இருக்கிறார். அவரை கைது செய்வதற்காக துபாய் போலீசாரின் உதவியைம், இன்டெர்போல் உதவியையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடியிருந்தனர்.

மேலும், அவர் வேறு நாடுகளுக்கு தப்பிவிடாமல் இருப்பதற்காக அவருடைய பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பைசல் பரீத் துபாயில் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்துவந்த நிலையில், துபாய்க்கு சென்று பைசல் பரீத் என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள என்.ஐ.ஏ முடிவெடுத்துள்ளது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே