இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்டதற்கு அளிக்கப்பட்ட ரூ.15 லட்சம் இழப்பீட்டுத் தொகையோடு சேர்த்து 30 லட்சம் திரட்டி தருகிறேன்; பாஜகவினர் யாராவது கொலையுண்டால் கொடுங்கள் என்று கமலேஷ் திவாரி மனைவி ஆவேசமாக பேசியுள்ளார்.
கமலேஷ் திவாரி கொலை வழக்கில் போலீஸார் விசாரணை தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் NIA விசாரணையை ஏற்று நடத்த வேண்டும் என்றும் கமலேஷ் திவாரி மனைவி கிரண் திவாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 18ம் தேதி அன்று இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி தனது அலுவலகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட அஷ்பக் உசேன், 34, மற்றும் மொய்னுதீன் குர்ஷித் பதான் (27) ஆகியோரை குஜராத்தைச் சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு-தடுப்புப் படை (ஏடிஎஸ்) அக்டோபர் 22 அன்று கைது செய்தது.
மேலும், இதுவரை கொலைக்கு சதிதிட்டம் தீட்டியதாக அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவியதாக மேலும் 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உ.பியைச் சேர்ந்த இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் திருப்தி இல்லை என்று அவரது மனைவி கிரண் திவாரி தெரிவித்துள்ளார். மேலும் இவ்வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று ஐஏஎன்எஸ் இடம் கூறியதாவது:
போலீஸார் நடத்திவரும் விசாரணை மிகுந்த ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் எனக்கு அளித்துள்ளது. இந்த வழக்கு ஏன் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்படவில்லை? எனக்குத் தெரியும் உத்தரபிரதேச காவல்துறையும் பயங்கரவாத எதிர்ப்புப் படையும் இதைச் சரியாக செய்ய மாட்டார்கள்.
எனது கணவர் நாகா ஹிந்தோலா காவல்நிலைய அதிகாரியுடன் கொலை செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது குறித்து பேசியிருந்தார், ஆனால் அந்த காவல் அதிகாரி செவிசாய்க்கவில்லை.
எங்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக உத்தரப் பிரதேச அரசு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளது. இந்த பணத்தை நான் அப்படியே வைத்திருக்கிறேன், இதே போன்ற முறையில் ஒரு பாஜக தலைவர் கொல்லப்பட்ட பிறகு அரசாங்கம் வழங்கிய இழப்பீட்டுத் தொகை ரூ .15 லட்சத்தை சேர்த்து இதற்கு சமமான தொகையை திரட்டி, துயரமடைந்த குடும்பத்திற்கு ரூ .30 லட்சம் கொடுப்பேன்.
2015ல் தாத்ரி கும்பல் தாக்குதலில் உயிரிழந்தவருக்கு ரூ .50 லட்சம் வழங்கப்பட்டது, எங்களுக்கு ரூ .15 லட்சம் வழங்கப்பட்டது. உயிரின் விலையில்கூட வித்தியாசம் இருக்கிறதா? ஆனால் நான் அமைதியாக இருக்க மாட்டேன், தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டிருப்பேன். என் கணவரின் கனவுகளை நான் நிறைவேற்றுவேன்.
”முக்கியமான சாலைக்கு கமலேஷ் பாக் என பெயரிடப்பட வேண்டும். கொல்லப்பட்ட தனது கணவரின் சிலையை நிறுவ வேண்டும்” என்ற எங்கள் குடும்பத்தின் கோரிக்கையையும் மாநில அரசு புறக்கணித்து வருகிறது.
உண்மையான கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன். என் கணவரின் கொலையாளிகளை என்னிடம் கொடுங்கள், அவர்களுக்கு மரண தண்டனையை அரசாங்கத்தால் உறுதி செய்ய முடியாவிட்டால் நான் அவர்களைத் தூக்கிலிடுவேன்.
தற்போது எங்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் எங்கள் குடும்பத்தினருக்கு இசட் – பிளஸ் பாதுகாப்பு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். கொலை சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியான சவுராஷ்டிரஜீத் சிங்கின் பாதுகாப்பு அச்சம்தருவதாக உள்ளது. அவருக்கும் உரிய, போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். சவுராஷ்டிரஜீத் சிங் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அவர் தான் கொலையாளிகளை அடையாளம் காண முடியும்,
இவ்வாறு கிரண் திவாரி தெரிவித்தார்.