நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் முதன்முறையாக தேர்தலில் களம் காண்கிறார். அவர் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியை வைத்தே அதே பெயரில் டுவிட்டரில் டிரண்ட் ஆனது.

ஏப்., 6ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால் அரசியல் கட்சியினர் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.

ஒரு பக்கம் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வரும் நிலையில் மற்றொரு புறம் தேர்தல் கூட்டணி முடிந்து வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆளும் அதிமுக அரசு தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது. திமுக., கட்சி இன்று வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சில தினங்களுக்கு முன் அறிவித்த நிலையில் இன்று (மார்ச் 12) அடுத்தக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. 

இதில் இக்கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுப்பற்றி டுவிட்டரில், ”மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்” என பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

கடந்த 2018, பிப்., மாதம் கட்சி துவங்கிய கமல்ஹாசன் 2019ல் நடந்த லோக்சபா தொகுதியில் 37 வேட்பாளர்களை நிறுத்தினார்.

இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

இப்போது சட்டசபை தேர்தலில் அவர் களம் காண்கிறார். அரசியல் கட்சி ஆரம்பித்த பின் அவர் களம் காணும் முதல் தேர்தல் இதுவாகும்.

இதனால் அவரின் இன்றைய அறிவிப்பு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

#கோவை_தெற்கில்_நம்மவர், #CoimbatoreSouth, #Kamalhassan ஆகிய ஹேஷ்டாக்குகள் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

கமல் தெற்கு தொகுதியில் போட்டியிடும் அறிவிப்பு தொடர்பாக டுவிட்டரில் சிலர் பதிவிட்ட கருத்துக்கள்…

* நேர்மையாளர் தேர்தலில் போட்டியிடுகிறார். தமிழகத்தின் வருங்கால முதல்வரான கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறார்.

அவருக்கு வாழ்த்துக்கள்

* ரீல் வாழ்க்கையில் எப்போதும் ஹீரோவாக நடித்த மனிதன்(கமல்ஹாசன்), நிஜ வாழ்க்கையில் ஒரு ஜோக்கராக வெளிவரக்கூடும் என்ற உணர்வு எனக்கு தோன்றுகிறது.

* கொங்கு நாட்டின் வேந்தனாக களம் இறங்கும் நம்மவர். என்னுடைய ஓட்டு போடும் தொகுதி கோவை தெற்கு. பிறந்தபலனை அடைந்தேன்.

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்..

* ரெடியா கோயமுத்தூர் மக்களே. தமிழகத்தின் வருங்கால முதல்வர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறார்.

* பாஜக, காங்கிரஸை எதிர்கொள்ள கோவையில் தெற்கில் கமல்ஹாசன் போட்டியிடுவார். இதன் பொருள் என்னவென்றால் அவர்கள் இருவரையும் எதிர்ப்பதே அவரின் எண்ணமாக உள்ளது.

* கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். ”கொங்கு செழித்தால், எங்கும் செழிக்கும்” என்பது பழமொழி.

ஆனால் இப்போது ஊழல் தலைநகராக கொங்கு மாறியிருப்பது வருத்தமளிக்கிறது. அதை மாற்ற தான் அங்கு களம் காண்கிறார்.

* கோவையில் அரசியல் விஸ்வரூபம். கோவைக்கு ஒரு டிக்கெட் போட்ற வேண்டியது தான். கில்லாடி ஊரிலே யாராடா கூறடா, மல்லாடி பார்ப்போமா வாங்கடா…

* சரி தான் கோவை தெற்கு, சங்கிகளின் கூடாரம், காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. பாதுகாப்பாக வெல்ல முடியும் என்ற எண்ணத்தில் களமிறங்கியுள்ளார். காங்கிரஸார் கையில் உள்ளது வெற்றி. இந்த தொகுதியின் மீது தனிக்கவனம் செலுத்துங்கள்.

* கோயம்புத்தூர் தெற்கு சிறந்த தேர்வாகும்.

எம்.என்.எம் இங்கே மிகச் சிறந்த வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது.

* கோவை தெற்கில் கமல் போட்டியிடுவது விவேகமான தேர்வு. அக்கட்சியின் மகேந்திரனுக்கு அந்த பகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இது கமலுக்கு கிடைத்த மிகப்பெரிய பிளஸ்.

அதேசமயம் காங்கிரஸ், பா.ஜ.,வை எதிர்த்து தான் கமல் போராடுகிறார், திமுக., அதிமுகவை அல்ல.

இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களை மேலே சொன்ன ஹேஷ்டாக்கில் பதிவிட்டு டிரெண்ட் செய்தனர்.

பொதுவாக பலரும் அவர் தேர்தலில் முதன்முறையாக களம் காண்பதற்கு வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே