ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அக்.26ம் தேதி தீர்ப்பு..!!

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கக் கோரும் வழக்கில் அக்டோபர் 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக மற்றும் தமிழக சுகாதாரத் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. 

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கடந்த ஜூலை 27-இல் தீா்ப்பளித்தது.

அதில், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளும் முடிவு எடுக்க வேண்டும்.

இது தொடா்பாக மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, தமிழக அரசின் தரப்பில் ஆகஸ்ட் 4-இல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், ஓபிசி வகுப்பினருக்கு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நிகழ் கல்வியாண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கோரும் மனுவிற்கு மத்திய அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் மருத்துவ மேல்படிப்பிற்கான இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்த நடைமுறையை முடிவு செய்யும் வரை ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டைக் கூட இந்த ஆண்டு வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு தெரிவித்தது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அக்டோபர் மாதம் 26ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு தீர்ப்பு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே