சென்னையில் கவரிங் நகைகளுக்கு வங்கிக்கடன் பெற்று மோசடி செய்த நகை மதிப்பீட்டாளார் கூட்டாளியுடன் கைது

கவரிங் நகைகளை வைத்து கடன் திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 2 லட்ச ரூபாய் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அந்த வங்கியில் நகை மதிப்பீட்டாளராக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த முரளி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தங்க நகைக்கடன் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்துள்ளார்.

அதில் கவரிங் நகைகளுக்கு 101 முறை ஒரு கோடியே 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கியிருப்பது விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நகை மதிப்பீட்டாளர் முரளியை சந்திக்க போலி நகையுடன் வந்த நபரை வங்கி மேலாளர் பிரவீன் குமார் எதேச்சையாக விசாரித்த போது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. 

இந்த மோசடி கடந்த 4 ஆண்டுகளாக நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வங்கி மேலாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.

நகை மதிப்பீட்டாளரான முரளி, தங்க நகைக்கடன்பெறும் வாடிக்கையாளர்களாக தனது நண்பர்கள், உறவினர்களை ஈடுபடுத்தியுள்ளார்.

அவர்களிடம் கவரிங் நகைகளை கொடுத்து வாடிக்கையாளர் போல் வங்கிக்கு வரவழைத்து அவற்றை மதிப்பீடு செய்யும் முரளி, கவரிங் நகைகளை வங்கி லாக்கரில் வைத்துவிடுவார்.

அதற்கான கடன் பணத்தில் வாடிக்கையாளர்கள் போல் வரும் தனது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கமிஷன் வழங்கிவிட்டு, மற்ற பணத்தை வைத்துக்கொள்வார்.

இதேபோல் 101 முறை போலி கணக்குகளை தொடங்கி, தங்க நகைக்கடன் மூலம் ஒரு கோடியே 2 லட்சத்து 32 ஆயிரம் பணத்தை மோசடி செய்து திருடியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் போலீஸ்காரர் ஒருவரின் மனைவியையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் போது, நகை மதிப்பீட்டாளர் முரளிக்கும் சாந்தி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிறகு சாந்தி மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார்.இந்த மோசடியில் முரளிக்கு உடந்தையாக இருந்து உதவி செய்தவர்கள் யார், யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே