சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தி ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் நாளுக்கு நாள் ரவுடிசம் அதிகரித்து வருகிறது. மதுரையில் கூலிபடையினர் அட்டகாசம் தலையெடுக்க தொடங்கியுள்ளது. நெல்லையில் சாதிய மோதலில் அண்மைக்காலமாக கொலைகள் அதிகரித்து வருகிறது, டெல்டா மாவட்டங்களில் மோதல் அதிகரிப்பு என மாநிலம் முழுவதும் சட்டஒழுங்கு பிரச்னைகள் நடக்கிறது.
இது காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க அவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குற்றங்களை தடுக்க ரவுடிகளின் வீடுகளில் சோதனை மற்றும் விசாரணை நடத்தப்பட்டது. குற்றச்சம்பங்களில் ஈடுபடாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சென்னையில் துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தலைமையில் நடந்த சோதனையில் ரவுடிகளின் வீட்டில் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக புளியந்தோப்பில் உள்ள 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் இரவில் அதிரடி சோதனை நடத்தினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல்லில் 44, பெரம்பலூரில் 6 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் 36 ரவுடிகளை காவல் நிலையங்களுக்கு பிடித்துச்சென்றனர். கன்னியாகுமரியில் ரெய்டு நடத்திய போலீசார் நன்னடத்தை விதிகளை மீறிய 39 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.