கண்களின் அழகை அதிகமாக்கி காட்டுவது இமைகளில் இருக்கும் முடிகள் தான். இந்த முடிகளின் வளர்ச்சிக்கும் பராமரிப்பு உண்டு. அது குறித்து பார்க்கலாம்.

கண்களின் மேல் இருக்கும் புருவங்களைப் போன்று கண் இமைகளும் அடர்த்தியாக இருந்தாலே அழகு கூடுதல் தான். தற்போது இவையும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. அதை மறைக்கத்தான் ஐ லாஷ் பயன்படுத்துகிறார்கள். இது அந்த நேரத்தில் அடர்த்தியான இமை முடிகளை காண்பித்தாலும் பல நேரங்களில் ஐலாஷ் குறையும் போது மெலிந்து காட்டி கொடுக்கிறது. கண் இமை முடிகள் 0.15 மி.மீட்டர் வரை வளரும். இவை 5 அல்லது 6 மாதங்களில் உதிர்ந்து மீண்டும் வளர தொடங்குகிறது. அப்படி வளரும் முடிகள் குறைந்தது 3மாதங்கள் வரை ஆகலாம். அதனால் செயற்கையாக முடி வளர்ச்சியை காண்பிக்காமல் இயற்கையாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
​தேங்காய்ப்பால்
தேங்காய்ப்பால் சருமத்துக்கும், கூந்தலுக்கும் செய்யும் நன்மைகள் குறித்து பலமுறை படித்திருக்கிறோம். பலரும் பராமரிப்பு செய்தும் இதன் நன்மையை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தேங்காய்ப்பால் கண் இமைகளின் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் முறை குறித்து பார்க்கலாம்.
தேங்காய்ப்பாலை முதல் பாலை இரண்டு முறை வடிகட்டி தூசி இல்லாமல் எடுத்துகொள்ள வேண்டும். அதை சுத்தமான பஞ்சு அல்லது சுத்தமான வெள்ளைத்துணியில் நனைத்து அந்த துணியை கண்களின் மீது வைக்கவேண்டும். கண்களை மூடியபடி படுத்துகொண்டு நன்றாக இமையின் மீது படும்ப்படி வைத்து 15 நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். தினமும் இப்படி வைத்து எடுக்கலாம். எப்போது ஒய்வாக இருக்கிறீர்களோ அப்போது வைத்து எடுங்கள். தொடர்ந்து செய்து வந்தால் முதலில் முடி உதிர்வு அந்த இடத்தில் குறைந்து முடி அடர்த்தி அதிகரிக்கும்.

​இமைகளுக்கு மசாஜ்
கூந்தலுக்கும் சருமத்துக்கும் மசாஜ் செய்வது போன்று கண்களுக்கும் கூட மசாஜ் செய்யலாம். ஆனால் கண்களுக்கு கீழ் கருவளையம் உண்டாகும் போது செய்யும் மசாஜ் வேறு. இமைகளுக்கு செய்யும் மசாஜ் வேறு. தினமும் காலையில் எழுந்ததும், அல்லது தூங்கும் முன்பு இதை செய்ய வேண்டும்.

கை விரல்களை சுத்தமாக கழுவி சுத்தமான ஆலிவ் எண்ணெய் விரல்களில் தொட்டு, விரல் நுனிகளை கண்கள் மூடியபடி இமையின் மீது வைத்து வட்டவடிவில் இலேசாக மசாஜ் போன்று தேய்க்கவும். அதிக அழுத்தம் கொடுக்ககூடாது. அதே நேரம் மசாஜ் செய்வதன் மூலம் இமைகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் செய வேண்டும். தொடர்ந்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்தால் போதுமானது. தொடர்ந்து செய்துவந்தால் மாற்றம் உணரலாம்.

​பெட்ரோலியம் ஜெல்லி
எண்ணெய் போன்று வழவழப்பாக இருக்கும் இந்த பொருள் வாஸ்லைன் என்று அழைக்ககூடிய ஜெல்லி. சருஅம் ந்ரிச்சலை நீக்கவும் பயன்படுத்தப்படும் இதை கொண்டு கண் இமைகளின் அடர்த்தியை அதிகரித்து கொள்ள முடியும்.

கூந்தல் சருமம் இரண்டின் பயன்பாட்டுக்கும் உதவும் இந்த பெட்ரோலியம் ஜெல்லியை இமை மீது வளரும் முடிகள் மீதும் தடவுவதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதை நேரடியாக இமை முடிகள் மீது தடவாமல் மஸ்காரா பிரஷ் கொண்டு இமை முடிகளின் மீது தடவினால் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரசெய்யும்.

​விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் முடி வளர்ச்சிக்கும் கருமைக்கும் சிறப்பாக உதவக்கூடியது. அடர்த்தியான பிசுபிசுப்பு நிறைந்த விளக்கெண்ணெயை முடி வளர்ச்சிக்கும், புருவ முடி அடர்த்திக்கும் உதவும். இந்த விளக்கெண்ணெய் இமை முடிகள் வளரவும் கூட உதவும்.

விளக்கெண்ணெய் சுத்தமாக இருக்க வேண்டும். அதில் எலுமிச்சை துருவலை சேர்த்து 10 மணி நேரம் ஊறியதும் விளக்கெண்ணெயை மேலாக்க எடுத்து இயன்றால் வெள்ளைத்துணியில் வடிகட்டி வைத்து தூங்கும் போது கண் இமைகளில் தடவி படுக்க வேண்டும். கவனம் எலுமிச்சை சாறும் விளக்கெண்ணெயும் கண்களுக்குள் பட்டால் எரிச்சலை உண்டாக்கிவிடும்.

​ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் உடல் ஆரோக்கியம், சருமம், கூந்தல் என அனைத்துக்கும் பலன் தரக்கூடியது. ஆலிவ் கூந்தலை வறட்சியிலிருந்து காப்பாற்றகூடியது என்பதால் இமை முடிகளையும் ஈரப்பதமாக வைத்து, வலுவாக வைத்து உதிர்விலிருந்து காப்பாற்றுகிறது. இந்த எண்ணெயில் வைட்டமின் இ மற்றும் ஒலிக் அமிலம் இருப்பதால் அவை இமை முடிகளுக்கு ஊட்டசத்து தந்து அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது. இயற்கையான முறையில் தீர்வு தரும் இந்த ஆலிவ் எண்ணெய்க்கு மாற்றாக வைட்டமின் இ ஆயில் மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.
மேற்கண்ட பொருள்கள் எல்லாமே பக்கவிளைவுகள் இல்லாதவை. கெமிக்கல் கலக்காதவை ஆனாலும் இதை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை. கண்களுக்குள் சென்றால் எரிச்சல், அலர்ஜி, சிவப்பு தடிப்பு பிரச்சனைகளை உண்டாக்கிவிடக்கூடும். அதே நேரம் பாதுகாப்பான முறையில் இதை பயன்படுத்தினால் நிச்சயம் இமை முடிகள் ஐலாஷ் போடாமலே அடர்த்தியாக கருமையாக ஜொலிக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே