கர்ப்ப காலத்தில் பயணம் செய்தால் கருவிற்கு ஆபத்து வருமா..? கையாள வேண்டிய பாதுகாப்புகள் இதோ…

சில நேரங்களில் கருப்பையின் வாய் பலவீனமாக இருந்தால் இரண்டு அல்லது மூன்றாவது மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கர்ப்பமாக இருக்கும் போது வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது பற்றி பலருக்கும் சந்தேகங்கள் இருக்கும். கருவுற்றிருக்கும் போது நீண்ட நேர பயணம் செய்தால் கருச்சிதைவு ஏற்படுமோ என்ற அச்சம் கொண்டவராக இருப்பின், உங்களுக்கான பதிவு தான் இது.

ஆரம்பகால கருச்சிதைவுகள் பயணங்களை தவிர ஹார்மோன் குறைபாடுகள், நோய்த்தொற்றுகள், அடிவயிற்றில் நேரடியாக அடி விழுவது அல்லது அதிர்ச்சி ஏற்படுவது, விபத்து உள்ளிட்டவற்றாலும் நிகழ்கின்றன. சில நேரங்களில் கருப்பையின் வாய் பலவீனமாக இருந்தால் இரண்டு அல்லது மூன்றாவது மாதங்களில் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கர்ப்பமாக இருக்கும் போது ஏற்கனவே உடல் மிக சோர்வாக இருக்கும். அந்த நேரத்தில் வாக்கிங் போவது நல்லது என்றாலும் கூட சிலரால் அதை கூட செய்ய முடியாத அளவிற்கு சோர்வு ஆட்டி வைக்கும். எனவே பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் நீண்ட தூரம் பயணங்களை செய்யவே தயங்குவார்கள்.

பொதுவாக கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கருச்சிதைவு ஏற்படுவதை தவிர்க்கவும், இறுதி கட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் திடீரென பிரசவ வலி வரும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. இடைப்பட்ட காலங்களில் மிகவும் பாதுகாப்பாக பயணிக்கலாம்.

எனினும் கட்டாயம் பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அடுத்த கணமே கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் முதல் பயம், பயணம் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமா என்பது தான். இத்தகைய சூழலில் உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி உடல்நிலை பற்றி எடுத்து கூறி, தற்போது பயணம் செய்யலாமா என்பது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். மருத்துவர் பயணம் செய்யலாம் என்று கூறிவிட்டால் தாய் மற்றும் கருவிற்கு சிக்கல்கள் ஏற்படுத்தா வகையில் பயணங்களை திட்டமிடுவது அவசியம்.

ஆனால் உங்கள் கர்ப்பத்திற்கு சிறப்பு கவனம் தேவைப்படும் நிலையில் இருக்கிறீர்கள் என்றால் கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது பாதுகாப்பானதல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் பயணத்திற்கு தயாராகிறீர்கள் என்றால் கீழ்காணும் விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

கருப்பையில் உள்ள கரு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும். ஈர்ப்பு விசையால் அது பாதிக்கப்படுவதில்லை. பயணத்தின் போது நிகழும் சிறிய அளவிலான குலுங்கல், படிக்கட்டுகளில் ஏறுதல், வாகனம் ஓட்டுதல் அல்லது எளிமையான உடற்பயிற்சி செய்வது கருக்கலைப்பை ஏற்படுத்தாது.

பயணம் செய்வது எனற முடிவிற்கு வந்த பின் உங்கள் டாக்டரின் வழிகாட்டுதலோடு வலி நிவாரணி மருந்துகள், முதலுதவி பொருட்கள், வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை மறக்காமல் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை டிராவல் அலர்ஜி உங்களுக்கு இருந்தால் அதேகேற்ப டாக்டர் சொல்லும் மாத்திரைகளை கையிலேயே வைத்து கொள்ளுங்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் பயணத்திற்கு முன்னும், பின்னும் ஆரோக்கியமான மற்றும் லேசான உணவை சாப்பிட்டால் குமட்டல், வாந்தி உள்ளிட்ட அசௌகரியத்தை குறைக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே