ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பையின் தலைவிதி திங்களன்று முடிவு செய்யப்பட்ட பின்னர், ஐபிஎல் தொடரின் எதிர்காலம் குறித்த அறிவிப்புகளுக்காகத்தான் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஐபிஎல் 2020 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்பதை ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், “ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும், ஆனால் முதலில் அதை அங்கு நடத்த இந்திய அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும்.
ஐபிஎல் தொடருக்கான தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை, அடுத்த ஏழு அல்லது பத்து நாட்களில் நடைபெறும் அடுத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.
மேலும் ஐபிஎல் தொடர் குறித்த முறையான அறிவிப்பு அடுத்த ஆலோசனை கூட்டத்தின் போது வெளியிடப்படும். துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று முக்கிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்படுமா என்று கேட்டபோது, அதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசாங்கம் தான் முடிவு செய்யும் என்றும் கூறினார்.
ஐபிஎல் தொடர் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடக்கும் என்று தகவல்கள் பரவி வருகிறது.
2014 ஆம் ஆண்டில் ஐபிஎல்லின் ஒரு பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது தான் இப்போது அங்கே நடத்த வழிவகுத்துள்ளது.