வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு – டிடிவி தினகரன் ட்வீட்..!!

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு அறிவிப்பு தேர்தலுக்காகத்தான் என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், நேற்று (பிப். 26), வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்.

மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில், ‘எம்பிசி-வி’ என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது. 

இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன.

20% இட ஒதுக்கீட்டில் மீதம் உள்ள 2.5% மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீடு ஆகும்.

தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் தமிழக அரசு ஆணையம் அமைத்துள்ளது.

அதன் அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், இந்த இட ஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதத்திற்குப் பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் எனவும், சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (பிப். 27) தன் ட்விட்டர் பக்கத்தில், “எல்லா சமூகங்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், அவசர கதியில் வன்னியர்களுக்கு 6 மாதங்களுக்கு தற்காலிக உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது தேர்தலுக்காகத்தான் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாக தெரிகிறது.

109 சமூகங்களை உள்ளடக்கிய எம்பிசி பிரிவில் எந்தச் சமூகமும் பாதிக்கப்படாத அளவுக்கு இட ஒதுக்கீட்டினை முறையாக வழங்குவதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும்.

எதற்காக இந்த அவசரக் கோலம்? வன்னியர் உள் ஒதுக்கீட்டினை ஆய்வு செய்ய இந்த அரசாங்கம் அமைத்த நீதிபதி குலசேகரன் கமிட்டி என்ன ஆனது?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பைப் போல இதுவும் ஒரு கண்துடைப்புக்கான அறிவிப்பா? என்ற சந்தேகம் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே