ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி..!!

படுமோசமான இரண்டாவது இன்னிங்ஸால் இந்திய அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் ‘மறக்க முடியாத’ போட்டியான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி எளிதாக வென்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்ஸில் ஓர் அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே ரன்கள் எடுத்து அவுட்டாவது அரிதினும் அரிதான நிகழ்வு.

இந்த மோசமான சாதனையை ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படைத்துள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் அடிலெய்ட் மைதானத்தில் விளையாடியது.

பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 244 ரன்களும், ஆஸ்திரேலியா 191 ரன்களும் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்க்ஸை 53 ரன்கள் முன்னிலையில் தொடங்கியது இந்தியா.

இருப்பினும் 21.2 ஓவர்களில் 36 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது இந்தியா. அதனால் 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது.

அந்த அணிக்காக மேத்யூ வேட் மற்றும் ஜோ பேர்ன்ஸ் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். 2 விக்கெட் இழப்பிற்கு 21 ஓவர்களில் ஆஸ்திரேலியா இலக்கை எட்டியது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என முன்னிலை வகிக்கிறது. வேட் 33 ரன்களும், பேர்ன்ஸ் 51 ரன்களும், மார்னஸ் லபுஷேன் 6 ரன்களும், ஸ்மித் 1 ரன்னும் எடுத்திருந்தனர். ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்துவீச்சே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே