மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது.
டாஸ்வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்
முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷிம்ரோன் ஹெட்மேயர் 56 ரன்கள் குவித்தார்.
அடுத்ததாக பேட்செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.
ரசிகர்களை ஏமாற்றும் வகையில் ரோஹித் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல், கோலி இணை மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
அதிரடியாக ஆடிய ராகுல் 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் குவித்த நிலையில், காரி பியரே பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வழக்கத்தை விட இன்று கோலி அதிரடியாக ஆடினார்.
இதற்கிடையில் ரிஷப் பந்த் 9 பந்துகளில் 18 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம் கோலி 50 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அதன்மூலம் முதல் டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.