கடந்த நவம்பருக்குப் பிறகு ஒரே நாளில் அதிகரித்த கரோனா வைரஸ் தொற்று

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு நேற்று நாட்டில் ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவி வருகிறது. வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்தது.

ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோ பர், நவம்பர் வரை கரோனா தொடர்ந்து அதிகரித்து வந்தது. நவம்பருக்குப் பிறகு வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண் ணிக்கை வேகமாக குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 15 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த கரோனா தொற்று தற்போது 40 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 46,951 பேர் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த நவம்பருக்குப் பிறகு நேற்றுதான் அதிகளவில் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,951 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு 1,16,46,081 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 21,180 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,11,51,468பேர் குணமடைந்தனர்.

கரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,59,967 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,34,646 ஆக உள்ளது. இதுவரை 4,50,65,998பேர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதத்துக்குப் பிறகு கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது.

புதிதாக மகாராஷ்டிராவில் 30,535 பேருக்கும், பஞ்சாபில் 2,644 பேருக்கும், கேரளாவில் 1,875 பேருக்கும், கர்நாடகாவில் 1,715 பேருக்கும், குஜராத்தில் 1,580 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகளில் மட்டும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், உதய்பூர், ஆஜ்மீர் நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அங்குள்ள காய்கறி உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்களும் மூடப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் 11 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாக்பூரில் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் கூட்டம் சேர்வதாலும், கரோனா வைரஸின் உருமாறிய நிலைகளாலும் நாட்டில்கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் அதிகரித்துள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு நகரங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அப்பகுதிகளில் கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை அமைச்சகம் துரிதப்படுத்தி உள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே