2வது நாளாக தொடரும் வேலம்மாள் கல்வி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை..!!

தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்லூரிக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை இன்றும் நீடித்து வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மெட்ரிகுலேசன் பள்ளிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை வேலம்மாள் குழுமம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், வரி ஏய்ப்பு புகாரை அடுத்து சென்னை, மதுரை உள்பட சுமார் 50 இடங்களில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சுற்றுவட்டாரத்தில் சூரப்பட்டு, பருத்திப்பட்டு, அயனம்பாக்கம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வேலம்மாள் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரி, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளி, வேலம்மாள் இன்டர்நேசனல் பள்ளி உள்ளிட்டவற்றில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் வேலம்மாள் போதி கேம்பஸ், வேலம்மாள் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி சாலையிலுள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, அதே வளாகத்திலுள்ள சி.பிஎஸ்சி பள்ளி, திருப்புவனத்தை அடுத்த லாடனேந்தலிலுள்ள வேலம்மாள் உறைவிடப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து சோதனை நீடித்து வருகிறது.

தேனி அருகே முத்துதேவன் பட்டியில் உள்ள வேலம்மாள் சிபிஎஸ்இ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

நேற்றிரவு சோதனையை முடித்து கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் கல்லூரி கட்டுவதற்கு 250 ஏக்கரில் நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனை இன்னும் 2 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே