முற்படுத்தப்பட்ட சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க ரூ8 லட்சம் ஆண்டு வருமான வரம்பு என்பது எப்படி நிர்ணயிக்கப்பட்டது? இந்தியா முழுமைக்கும் அதாவது பெருநகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் என அனைத்துக்கும் ஒரே மாதிரியான வருமான வரம்பு எப்படி சாத்தியம்? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுதான் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இடஒதுக்கீடு வரம்பு 50%க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் அரசியல் சாசனப் பாதுகாப்புடன் 69% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் பல முறை வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.

10% இடஒதுக்கீட்டால் குழப்பம்

எஞ்சிய 50% இடஒதுக்கீட்டை முழுமையாக முற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் அனுபவிக்கின்றனர். ஆனால் மத்திய பாஜக அரசு இந்த முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஆண்டு வருமானம் ரூ8 லட்சத்துக்குட்பட்டவர்களுக்கு தனியே ஒரு 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் இடஒதுக்கீட்டு முறையில் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இதனிடையே தமிழகத்தின் நீண்டகால சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் 10 ஆண்டுகாலம் மத்திய அரசு பணிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்திய அரசின் இந்த 10% மற்றும் 27% இடஒதுக்கீடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம்நாத், பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று விசாரித்தது.

உச்சநீதிமன்றத்தின் அதிரடி கேள்விகள்

இந்த விசாரணையின் போது இடஒதுக்கீடு வரம்புகள் தொடர்பாக சரமாரியான கேள்விகளை மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜிடம் கேட்டனர். குறிப்பாக 10% இடஒதுக்கீடு வழங்க வருமான வரம்பு ரூ8 லட்சம் என்பதை எப்படி நிர்ணயித்தீர்கள்? ஏதேனும் அறிவியல்பூர்வமான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த வருமான வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதெப்படி சமமாகும்?

உடனே கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன், இது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என கூறினார். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பை அப்படியே 10% இடஒதுக்கீட்டுக்கும் எப்படி செயல்படுத்த முடியும்? அத்துடன் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வருமான வரம்பு எப்படி சாத்தியமாகும்? பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் இரண்டுக்கும் எப்படி ஒரே மாதிரியான வருமான வரம்பு நிர்ணயிக்க முடியும்? என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே