சென்னையில் தடையை மீறி விநாயகர் சிலையை ஜீப்பின் முகப்பில் வைத்து பாஜக இளைஞரணி சார்பில் ஊர்வலம்

கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருவதால், நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லக்கூடாது என்றும் பொது இடங்களில் சிலை வைக்க கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனால், விநாயகருக்கே அரசு தடை விதிக்க கூடாது என பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையிலும், விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு விதித்த தடையை நீக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜகவினரும் இந்து முன்னணி கட்சியினரும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்தினர்.

 தடையை மீறி சிலை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவுறுத்தியதன் படி, பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், அரசின் உத்தரவை மீறி சென்னை வேளச்சேரியின் பிரதான சாலையில் இருந்து வேளச்சேரி 100 அடி சாலை வரை விநாயகர் சிலையை ஜீப்பில் வைத்துக் கொண்டு, பாஜக இளைஞரணி சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து பதற்றத்தை உருவாக்க முயன்றதற்காக, பா.ஜ.க இளைஞரணியினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், விநாயகர் சிலையை நிறுவி பா.ஜ.கவினர் கொண்டாட்டத்தினால் வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியில்லாமல் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே