கலவரங்கள் நிகழ்ந்தால் ஹெச்.ராஜாதான் முழுக்காரணம் : தமிமுன் அன்சாரி

டெல்லி போன்று தமிழகத்தில் வன்முறை நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூரில் இன்று தமிமுன் அன்சாரி, செய்தியாளர்களிடம் பேசியதாவது, பாஜகவின் ஹெச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ட்விட்டர் மூலம் மதக் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கலவரங்கள் நிகழ்ந்தால் அதற்கு முழுக்காரணம் ஹெச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ஆகியோர்தான்.

அவர்கள் மீது தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் ட்விட்டர் பதிவுக்குப் பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. 

அது தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மத்திய அரசின் கருப்புச் சட்டங்களான குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறும் வரை அனைத்து ஜனநாயக அமைப்புகளுடனும் அறவழியில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக வருகின்ற 29 ஆம் தேதி கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் ஜனநாயக அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்கின்றனர் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே