ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை – முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகையே ஆட்டிப்படைக்கும் உயிர்கொல்லி கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 500யை தாண்டிய நிலையில் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் அதை தடுக்கும் விதமாக எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் , பாதுகாப்பை உறுதி செய்ய புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதை மாநிலம் முழுவதும் எவ்வாறு கடை பிடிக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அனைத்து எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள்.எம்.பிக்கள் பங்கேற்றனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்கவில்லை.

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து மக்கள் காவல்துறையினரிடம் சண்டைப்போட்டு, தகராறில் ஈடுபடுகின்றனர்.

புதுச்சேரி மக்கள் அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை அளிக்கப்படும்.

மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் மக்கள் வெளியே வராமல் தடுப்பதற்கு தேவைப்பட்டால் துணை ராணுவப் படை உதவி கோரப்படும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே