நான் எப்போதும் விவசாயிகள் பக்கம்தான் – பூபிந்தர் சிங் மான் அறிவிப்பு..!!

மாநிலங்களவையின் முன்னாள் உறுப்பினரும், அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் (ஏ.ஐ.கே.சி.சி) தற்போதைய தலைவருமான பூபிந்தர் சிங் மான், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக பூபிந்தர் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ‘மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவும், மத்திய அரசும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அமைத்த நிபுணர் குழுவில் என்னை நியமித்ததற்கு உச்ச நீதிமன்றத்திற்கு நான் நன்றி கூறுகிறேன்.’

‘வேளாண் சட்டங்கள் குறித்து விவாசய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்ச உணர்வை கருத்தில் கொண்டு, ஒரு விவசாயி மற்றும் விவசாய சங்கத் தலைவர் என்ற முறையில், பஞ்சாப் மற்றும் இந்திய விவசாய பெருமக்களின் நலன்களைப் பாதுகாக்க எந்தவொரு பதவியையும் நான் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில மக்களுடன் என்றும் துணை நிற்பேன், ‘என்று தெரிவித்தார்.

பஞ்சாபின் படாலா மாவட்டத்தில் வசிக்கும் பூபிந்தர் சிங் 1990 முதல் 1996 வரை மாநிலங்களவையில் சுயாதீன உறுப்பினராக இருந்தார். 2012, 2017களில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல்களிலும், 2019ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதாரவான நிலைப்பாடை வெளிபடுத்தினார். மேலும், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் ஆதரித்தார்.

இவரது மகன், கடந்த 2018ம் ஆண்டு முதல் பஞ்சாப் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். மேலும், முதல்வர் அமரீந்தர் ஆட்சியின் போது பஞ்சாப் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய உறுப்பினராகவும் சில காலங்கள் செயல்பட்டு வந்தார் .

முன்னதாக, மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள்; அரசியல் சாசன ரீதியாக சரியானதா என்பது குறித்தும் விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்று கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ் ஏ போப்தே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உச்சநீதிமன்றம் அமைத்த எந்தவொரு குழு செயல்முறையிலும் பங்கேற்க மாட்டோம் என்று விவசாயிகள் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே