மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் வரலாம் – ராதாகிருஷ்ணன்

கேரளத்தில் பரவிவரும் பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்கு வராமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை தொடர்ந்து பல்வேறு முகாம்களில் கரோனா பரிசோதனையை செய்து வருகிறது.

பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்கள் 2,144 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 24 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

பிரிட்டனிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கு என மொத்தமாக 44 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேரளத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் வரலாம்.

எனவே, கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான தேனி, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 26 செக் போஸ்ட்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கால்நடைத்துறை- சுகாதாரத்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்படுகிறது.

மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 5 மடங்கு டெங்கு பாதிப்பு குறைவு’ என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே