கோவில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க இடைக்கால தடை!

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே