தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில், சென்னை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை மழை பெய்துள்ளது

சென்னை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

சென்னையைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 112 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கிண்டியில் 107 மில்லி மீட்டரும், மைலாப்பூரில் 102 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்ததால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவில் மழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்று காலையிலும் மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் காந்தி சாலை மண்டபம், ஊஞ்சல் மண்டபம், மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குண்டும் குழியுமான சாலைகளில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடுமாறி விழுந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி, பாலவிநாயகர் சிலை, அந்தோணியார் கோவில் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளம் மழை நீரில் மூழ்கியிருப்பதால், கோவை எக்ஸ்பிரஸ் ரயில், மேலூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

கோவை

கோவையில் ஜீப் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. கேரளாவில் இருந்து வந்தபோது சோமனூர் பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தரைப்பாலத்தின் அருகே அந்த ஜீப் நீரில் மூழ்கியது. இதனைக் கண்ட ஓட்டுநர் ஜீப்பில் இருந்து குதித்து உயிர்தப்பினார்.

கடலூர்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் விடிய விடிய கொட்டிய கன மழையால், என்எல்சி தெர்மல் சாம்பல் ஏரியில் இருந்தும் சுரங்கங்களில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அருகில் உள்ள ரோமாபுரி தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் ஓடுகிறது.

கடலூர் – விருத்தாசலம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. பயணிகள் வெள்ளத்தில் நடந்து சென்று ரோமாபுரி தரைப்பாலத்தை கடக்கின்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் கோதையாறு மற்றும் பரளி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆரப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது

விடுமுறையான இன்று தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து திற்பரப்பு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்யும் மழையால் தாமிரபரணி ஆற்றில் 2 வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நிரம்பிய நிலையில், அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரத்து 590 கன அடி தண்ணீர் வருகிறது. அனையில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் டவுன் பகுதிகளில் இருந்து மேலப்பாளையம் செல்லும் தாமிரபரணி பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே