கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும், நிலச்சரிவினாலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக கேரளாவில் மத்திய பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
மேலும் பத்தினம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை கேரளாவில் பெய்த கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே கேரளாவில் மீட்பு படையினர் துரிதமாக மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், முடிந்த அளவுக்கு மக்களை காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.