கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ ‘சே’ குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார்.
பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா.
மருத்துவராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் 92வது பிறந்தநாள்.
அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம்.
- சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக்சிகோவில் சந்தித்தார்.
- பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசுக்கு எதிரான புரட்சியில் பங்கேற்ற சே குவேரா, புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் பிடல் தலைமையில் அமைந்த கியூப அரசில் அமைச்சர், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்தார்.
- 1951இல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது தனது நண்பர் அல்பெர்டோ கிரானடோவுடன் ஒன்பது மாதங்கள் இரு சக்கர வாகனத்தில் தென்னமெரிக்க கண்டம் முழுதும் பயணித்தார்.
- அப்போது சே குவேரா எடுத்த குறிப்புகள் ‘தி மோட்டர் சைக்கிள் டைரீஸ்’ என்ற பெயரில் பின்னாளில் புத்தகமாக வெளியானது. அந்தப் புத்தகத்தின் அதே தலைப்பில் ஒரு ஸ்பானிய மொழித் திரைப்படமும் எடுக்கப்பட்டது.
- பயணங்களில் பேரார்வம் கொண்டிருந்த சே குவேரா, இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் முன்பே, ஜனவரி 1950இல் அர்ஜென்டினாவில் தனியாகவே தனது சிறிய எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் சுமார் 4500 கிலோமீட்டர் பயணித்திருந்தார்.
- 1959 முதல் 1961 வரை கியூபா மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றினார் சே குவேரா. அதே காலகட்டத்தில் கியூபாவின் நிதி மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.
- அப்போது நிலச் சீர்திருத்தம் மற்றும் தொழில் துறையை தேசியமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
- கியூப அரசின் பிரதிநிதியாக, இந்தியா, சோவியத் யூனியன் உள்பட பல நாடுகளுக்கு பயணம் செய்தார் சே குவேரா.
- 1964 டிசம்பரில் சே குவேரா தலைமையிலான கியூப பிரதிநிதிகள் குழு ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றது. அப்போது ஐ.நாவில் உரையாற்றிய சே தென்னாப்பிரிக்காவில் நிலவிய வெள்ளை நிறவெறி மற்றும் அமெரிக்கா கறுப்பர் இன மக்களை நடத்திய விதம் ஆகியவற்றை விமர்சித்தார்.
- அதே ஆண்டு இறுதியில் தனது மூன்று மாத சர்வதேச சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய சே குவேரா சீனா, வடகொரியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு கியூபா அரசின் வெளியுறவுத் தொடர்பை பலப்படுத்தினார்.
- 1965 பிப்ரவரி 24 அன்று அல்ஜீரிய தலைநகர் அல்ஜெய்ர்ஸ்-இல் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஒற்றுமை குறித்து நிகழ்த்திய உரையே சே குவேரா கடைசியாக பொது வெளியில் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக அறியப்படுகிறது.
- அதன்பின் சில வாரங்களில் மாயமான சே குவேரா குறித்து சில மாதங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை.
- அதே ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி, சே குவேரா கியூபா மக்களுக்கு எழுதிய ‘பிரியாவிடைக் கடிதத்தை’ பிடல் காஸ்ட்ரோ வெளியிட்டார்.
- கியூபப் புரட்சிக்கான தனது ஆதரவை அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்த சே, தனக்கு வழங்கப்பட்ட கியூபக் குடியுரிமை மற்றும் பதவிகள் அனைத்தையும் துறப்பதாகக் கூறியிருந்தார்.
- அந்தக் காலகட்டத்தில் காங்கோ ஜனநாயக குடியரசில் முன்னாள் பிரதமர் பாட்ரைஸ் லுமும்பாவின் ஆதரவாளர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சிக்கு ஆதரவாகப் போரிட தனது கொரில்லா படையினர் 12 பேருடன் காங்கோ சென்றிருந்தார் சே.
- காங்கோ கிளர்ச்சியாளர்களின் செயல் திறனின்மையால் ஏற்கனவே கவலையுற்றிருந்த சே குவேராவின் இருப்பிடம் மற்றும் நடவடிக்கை ஆகியவற்றை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ கண்டறிந்தது உள்ளிட்ட காரணங்களால் புரட்சியை செயல்படுத்த முடியவில்லை என்று சே நினைத்தார்.
- அதன்பின் உண்டான உடல்நலக் குறைவைத் தொடர்ந்து தான்சானியா மற்றும் செக் குடியரசில் தங்கியிருந்த சே, ஒரு போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பொலிவியா சென்றார்.
- 1967 அக்டோபர் 7 அன்று அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சே குவேரா அக்டோபர் 9 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.
- அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அப்போது வெளியே தெரிவிக்கப்படவில்லை.
- பின்னர் 1995இல் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக பொலிவியாவில் நடத்தப்பட்ட ஒரு தேடுதல் வேட்டையில் சே குவேராவின் உடல் என்று கருதப்பட்ட உடல் ஒரு விமானதளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
- அது சேவின் உடல்தான் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியபின், சே மற்றும் அவரது சகாக்கள் ஆறு பேரின் உடல்கள் கியூபா கொண்டுவரப்பட்டு அக்டோபர் 17, 1997 அன்று ராணுவ மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.