சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் 2வது நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக்குள் கடந்த 2017 ஆம் ஆண்டு குட்கா பொருட்களைக் கொண்டுவந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குட்கா தமிழகத்தில் எளிதில் கிடைக்கிறது என்பதை சுட்டிக்காட்ட திமுக குட்காவை கொண்டு வந்தது.
ஆனால் இது சட்டப்பேரவை அவமதிப்பு என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் 18 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சாஹி திமுக எம்எல்ஏக்கள் 18 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஆனால் மீண்டும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் உரிமைக்குழு மீண்டும் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடியது திமுக. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா,ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
அதில் சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரத்தில் உரிமைக்குழுவின் 2வது நோட்டீஸை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏக்கள் 18பேர் பேரவைக்குள் குட்கா எடுத்து வந்ததாக உரிமை குழு நோட்டீஸ் அனுப்பியது.
உரிமை குழுவின் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முதல் நோட்டீஸை உயர் நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்த நிலையில் 2வது நோட்டீஸை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.