அலிபாபா தலைவர் ஜாக் மாவுக்கு குருகிராம் நீதிமன்றம் சம்மன்

முன்னாள் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் சீனாவின் அலிபாபா நிறுவன தலைவர் ஜாக்மாவுக்கு குர்கான் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கல்வான் மோதலையடுத்து 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த செயலிகளுக்கு தடை விதிப்பதாக விளக்கமளித்தது.

இதனை தொடர்ந்து, தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க மத்திய அரசு வலியுறுத்திருந்தது.

அதாவது அந்த நிறுவனங்கள் செய்திகளை தணிக்கை செய்ததா அல்லது வெளிநாட்டு அரசாங்கத்திற்காக செயல்பட்டதா என பதிலளிக்குமாறு கோரியிருந்தது. தடை செய்யப்பட்ட செயலிகளில் சீனாவின் பிரபல நிறுவனமான அலிபாபாவின் UC Browser, UC News செயலிகளும் அடங்கும்.

இந்நிலையில் ஹரியானாவின் குருகிராமில் உள்ள UC Browser நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் புஷ்பேந்திர சிங் பார்மர் என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்திருந்தார்.

அதில் அலிபாபா நிறுவன செயலிகள் சீனாவுக்கு எதிரான செய்திகளை சென்சார் செய்து வெளியிடுவதாகவும், UC Browser மற்றும் UC News செயலிகளில் அதிக அளவில் போலி செய்திகள் காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக புகார் அளித்ததால் தன்னை பணிநீக்கம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து குருகிராம் நீதிமன்றம் அலிபாபா நிறுவன தலைவர் ஜாக்மாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 29ம் தேதி நேரிலோ, அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் 30 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ பதிலளிக்குமாறும் கூறியுள்ளது.

அக்டோபர் 2017ம் ஆண்டு வரை UC Browser நிறுவனத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய புஷ்பேந்திர சிங் பார்மர் ரூ. 2 கோடி இழப்பீடு கோரியும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

செயலிகள் தடை செய்யப்படுவதற்கு முன்னர், UC Browser இந்தியாவில் சுமார் 689 மில்லியன் பதிவிறக்கங்களையும், UC News 79.8 மில்லியன் பதிவிறக்கங்களையும் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே