தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு..??

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் அதிகரிப்பால் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கொரோனா பரவல் மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாதிப்பு குறைந்த நிலையில், தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வந்த போது இனி கொரோனா பயம் இல்லை என மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

ஆனால் அடுத்த மூன்று மாதங்களில் பாதிப்பு இந்த அளவுக்கு அதிகமாகி மீண்டும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதே தினசரி தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7000க்கு நெருக்கமாக இருந்தது. இப்போது 8000 என்பது மிகச் சாதாரணமாக வருகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்றுவந்தபோதே பாதிப்புகளும் அதிகமாக வந்துகொண்டிருந்தது. வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னரே தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

பாதிப்பு குறையவில்லை என்றால் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும், இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்தது.

அதன் பின்னரும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறதே ஒழிய குறைந்தபாடில்லை.

இந்நிலையில் ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே