ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் பெற்றுக் கொள்ளலாம் – அமைச்சர் காமராஜ்

ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க் பெற்றுக் கொள்ளலாம்  என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை டிரஸ்ட்புரம் பகுதியில் கொரோனா தடுப்பு சிறப்பு முகாமை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ‘தமிழக அரசின் நடவடிக்கைகளால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கொரோனா தொற்றின் வீரியம் குறைவாகவே உள்ளது.

ஆயினும் ஆடி மாத வழிபாட்டின் போது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

காய்ச்சல் முகாம்கள் நோய் தொற்றை கண்டறிய பெரிதும் உதவுகின்றன. தேனாம்பேட்டை மண்டலத்தில் மட்டும் 2,164 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மக்கள் அதிக அளவில் கூடும் மீன்மார்கெட், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் கூட்டங்களை கட்டுப்படுத்துவதற்கும் சமூக இடைவெளியை சரியாக கடைபிடிப்பதற்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,’என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், ‘ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருளை வாங்க வரும் 1,3,4 ஆகிய தேதிகளில் டோக்கன் வழங்கப்படும்.

பின்னர் டோக்கனை கொண்டு சென்று 5-ந்தேதி முதல் ரேசன் பொருட்களுடன் இலவச முக கவசங்களை பெற்றுக்கொள்ளலாம். குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 2 முக கவசங்கள் வழங்கப்படும்.

ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்,’என்று தெரிவித்தார்.

முன்னதாக ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே