திமுகவில் தேர்தல் பணிக்குழு செயலாளரும் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான வீரபாண்டி ராஜா இன்று காலமானார்.
திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் இந்த சோகம்நிகழ்ந்துள்ளது. திடீர் மாரடைப்பு காரணமாக வீரபாண்டி ராஜா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் ராஜா என்ற ராஜேந்திரன் கடந்த 2006ஆம் ஆண்டு வீரபாண்டி தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றிவந்த ராஜா, பின்னர் மாநில அளவிலான பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டு திமுகவில் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டி ராஜா, சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பூலாவரியில் தனது இல்லத்தில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாட இருந்தார். பிறந்தநாளையொட்டி இன்று காலை தனது தந்தை ஆறுமுகத்தின் படத்திற்கு மாலை அணிவித்த நிலையில் தொண்டர்களை சந்திக்க அவர் தயாராகிக்
கொண்டிருந்தார். அப்போது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்ததையடுத்து தனியார் கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜாவின் உடல் தற்போது அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மதுரைக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் தனது பயணத்தை முடித்துக்கொண்டு சேலம் வர உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கினறன.