தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதியாகி இருப்பது இதுவே முதல் முறை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 4,961 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என விமான நிலைய சுகாதார அலுவலர்கள், குடியேற்றப் பிரிவு அலுவலர்கள் தனித்தனியாக அளித்த பட்டியலில் இப்புள்ளிவிவரம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவில் உள்ள ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர், கடந்த 16 ஆம் தேதி மேற்கிந்திய தீவில் இருந்து புறப்பட்டு கத்தார் வழியாக 18 ஆம் தேதி கும்பகோணம் திரும்பினார்.

இவருக்கு மார்ச் 22 ஆம் தேதி சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், பின்னர் மார்ச் 25 ஆம் தேதி தஞ்சாவூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையிக்கு மாற்றப்பட்டார்.

அங்கு இவரது ரத்தம் மற்றும் சளி பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருப்பதை அடுத்து, அவருடன் இருந்த உறவினர்கள் அவரை சந்தித்த நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அவர் வசித்து வரும் தெருவில் உள்ளவர்களையும் வெளியே வர முடியாத அளவுக்கு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெளி நபர்களும் இப்பகுதிக்குச் செல்ல முடியாத அளவுக்குத் தெரு முனையில் இரும்புத் தடுப்புகள்அமைக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் லண்டனில் இருந்து காட்பாடிக்கு வந்த 49 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவலினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியை சேர்ந்த 49 வயது நபர் என 2 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 லிருந்து 40 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே