ஊரடங்கு விதியை மீறி கடை திறந்த தந்தை, மகன் – அடித்து கொலை செய்த தூத்துக்குடி போலீஸ்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் ஊரடங்கு விதியை மீறி கடையை திறந்தது தொடர்பாக போலீசாருடன் ஏற்பட்ட தகராறில் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்தனர். காவல்நிலையத்தில் தாக்கப்பட்டதன் விளைவாக இருவரும் உயிரிழந்ததாக கூறி குடும்பத்தினர், பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ். கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கு விதியை மீறி இரவு 8 மணிக்கு மேல் கடையை திறந்திருந்தது தொடர்பாக ஜெயராஜூக்கும் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காவல்நிலையத்துக்கு ஜெயராஜ் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தகவலறிந்து அங்கு சென்ற ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ்க்கும் போலீசாருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, ஊரடங்கு விதியை மீறியதாக வழக்குப்பதிவு செய்து மறுநாள் காலையில் கோவில்பட்டி கிளை சிறையில் இருவரையும் அடைத்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு, மாரடைப்பு ஏற்பட்டதால் சிறையின் பின்புறம் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகன் பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காய்ச்சல் எனக் கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தை ஜெயராஜும் இன்று காலை உயிரிழந்தார். காவல் நிலையத்தில் போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் தந்தை, மகன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

போலீசார் மீது கொலை வழக்கு பதிய வலியுறுத்தி சாத்தான் குளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு நடத்தி வருகின்றனர். மேலும், குடும்பத்தினர், வியாபாரிகள், பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 5 மணி நேரத்துக்கு மேலாக மறியல் நீடிப்பதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் அறிக்கை:

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து இறந்தது தொடர்பாக உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாக்கப் மர்ம மரணங்கள், நீதிமன்றக் காவலிலும் நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை, மகனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே