சாத்தான்குளம் சம்பவத்தை இழிவுப்படுத்தி ஃபேஸ்புக்கில் பதிவிட்ட சென்னை ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ்.

இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது.

இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். 

இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் பலியானார்.

போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல் இந்த சம்பவத்திற்கு வியாபாரிகள் சங்கம் சார்பாக சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளில் கடையடைப்பு செய்து வணிகர்கள் போராட்டம் செய்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சாத்தான்குளம் சம்பவத்தை இழிவு படுத்தும் வகையில் பதிவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியதாக காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே