வேகமாக நிரம்பும் ஆக்சிஜன் படுக்கைகள் : கையிருப்பு குறித்து ஆய்வு..!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதா என்பது குறித்து 2வது நாளாக ஆய்வு நடைபெற்று வருகிறது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்காக உள்ள 200 படுக்கைகளில் 120 படுக்கைகள் நிரம்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு 142 ஆக்ஸிஜன் சிலிண்டர் கையிருப்பு உள்ளதாகவும், இதன் மூலம் 3 நாட்களுக்கு நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 800 படுக்கைகளும் நிரம்பியதாகவும், டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுவருவதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் 40 சதவீத ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1055 படுக்கைகள் உள்ள நிலையில் 700 படுக்கைகள் நிரம்பியுள்ளதாகவும், போதுமான அளவு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இஎஸ்ஐ மருத்துவமனையில் 680 படுக்கைகள் உள்ள நிலையில் 580 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்தமுள்ள 600 படுக்கைகளில் 311 படுக்கைகள் நிரம்பியுள்ளன. மேலும், மருத்துவமனையில் 200 பி டைப் ஆக்சிஜன் சிலிண்டர்களும், 100 டி டைப் ஆக்சிஜன் சிலிண்டர்களும் கையிறுப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே