மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து இரண்டு மாதங்கள் கடந்து விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அரசுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடந்துமுடிந்த பின்னும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகள் தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர்.

அதில் ஒன்று தான் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி.

இப்பேரணி சில விஷமிகளால் வன்முறையாகத் திசைமாற்றப்பட்டாலும், விவசாயிகள் டெல்லி புறநகர்ப் பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அந்த வகையில் இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகளுக்கு சம்யுத்கா கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. 

இந்த அமைப்பு 40 விவசாய தொழிற்சங்களை உள்ளடக்கிய விவசாய அமைப்பு. இப்போராட்டம் மதியம் 12 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

போராட்டத்தின் எதிரொலியான ரயில்வே பாதுகாப்புப் படை பாதுக்காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. முக்கியமாக, பிகார், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர், பயணிகளுக்குத் தொந்தரவு ஏற்படாதவாறு அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்யுக்தா கிசான் அமைப்பும் விவசாயிகள் அனைவரையும் அமைதிப் போராட்டம் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது. போராட்டம் குறித்த முழுமையான வரைவு வந்தபின் ரயில்களின் இயக்கம் குறித்து முடிவெடுப்போம் என ரயில்வே வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே