வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடரும் விவசாயிகள் போராட்டம்..!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், நாளை மத்திய அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் அடுத்தக்கட்டமாக போராட்டத்தை விரிவுபடுத்த தீவிரமாக உள்ளனர்.

போராட்டகளத்தில் அமைக்கப்பட்டு இருந்த மேடையை விட நான்கு மடங்கு பெரிதான மிகப்பெரிய மேடையை விவசாயிகள் அமைத்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலைநகர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு அவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.

வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரையில் போராட்டம் வாபஸ் இல்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

எனவே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், அடுத்தகட்டமாக போராட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஹரியானா-டெல்லி சிங்கு எல்லையில் போராட்டகளத்தில் மிகப்பெரிய மேடை மேடை ஒன்றை விவசாயிகள் அமைத்துள்ளனர்.

ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த மேடையை விட இந்த மேடை நான்கு மடங்கு பெரியதாகும். போராட்டத்தில் பங்கேற்க தற்போது அதிகமான மக்கள் வருகிறார்கள் என்றும், முன்பு இருந்த மேடை அதிகமான மக்களை தங்க வைக்க போதுமானதாக இல்லை.

எனவே இந்த பெரிய மேடை அமைக்கப்பட்டுள்ளது என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் சங்க தலைவர்கள் உரை நிகழ்த்தவும் இந்த மேடை பயன்படுத்தப்படும். மேலும் மாலையில் இசை நிகழ்ச்சிக்கும் இந்த மேடை பயன்படுத்தப்படும் என விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

பாரதிய கிசான் யூனியனின் பொதுச்செயலாளர் சத்னம் சிங் சாஹ்னி கூறுகையில், நாளை அரசுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு அரசிடம் கோரிக்கை விடுப்போம்.

அதற்கு அரசு ஒப்புக் கொள்ளாவிட்டால், இந்த போராட்டம் மேலும் தொடரும் என்றார் அவர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே