தனித்தே பிரச்னையை எதிர்கொள்ளுங்கள்! – தங்கக்கடத்தல் விவகாரத்தில் பினராயி விஜயனை கை கழுவிய இடது சாரி முன்னணி

திருவனந்தபுரத்தில் அமீரக நாட்டின் தூதரக பெயரை பயன்படுத்தி, தங்கம் கடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச் செயலர் சிவசங்கருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும் தங்கக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண்ணை சிவங்சங்கர்தான் கேரள ஐ.டி துறையில் பணிக்கு அமர்த்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ‘ ஸ்வப்னா 10- ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாதவர்’ என்று அவரின் சகோதரர் பிரைட் சுரேஷ் என்பவரே கூறியுள்ளார். திருவனந்தபுரத்திலுள்ள யு.ஏ .இ அமீரகம் 3.9.19 ம் ஆண்டு ஸ்வப்னாவுக்கு நற் சான்றிதழ் ஒன்றை வழங்கியுள்ளது. அதில், ஸ்வப்னா தூதரகத்தில் எக்ஸிகியூடிவ் செகரட்டரியாக பணியாற்றியதாக சொல்லப்பட்டுள்ளது. 10- ம் வகுப்பு தேறாதவர் எப்படி எக்ஸ்கியூடிவ் செகரட்டரியானார் என்று கேரளாவே சிரிப்பாய் சிரிக்கிறது. அதற்கு பிறகு, கேரள ஐ.டி துறையில் மேலாளர் பதவியிலும் ஸ்வப்னா நியமிக்கப்பட்டதுதான் உச்சக்கட்ட கேலிக் கூத்து. கடந்த 4 நாள்களாக தலைமறைவாக இருக்கும் ஸ்வப்னா கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

தங்கக்கடத்தல் விவகாரத்தில் பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கேரள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. ஏற்கெனவே, கொரோனா காலத்தில் கேரள சுகாதாரத்துறை எடுத்த புள்ளி விவரங்களை அமெரிக்காவின் ஸ்பிரிங்லர் நிறுவனத்துக்கு கைமாற்றியதாக பினராயி விஜயன் அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, ‘ஸ்பிரிங்லர் நிறுவனத்துக்கு சேகரிக்கப்பட்ட தரவுகளை இணையத்தில் அப்லோட் செய்யும் பணி வழங்கப்பட்டதாகவும் இந்தியர்கள் பற்றிய தகவல்களை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியது ஏன்?’ என்று கேரள எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கேள்வி எழுப்பியிருந்தார். ஸ்பிரிங்லர் நிறுவனத்துக்கு தரவுகளை மாற்றிய விவகாரத்திலும் பினராயி விஜயனின் தனிச் செயலர் சிவசங்கர்தான் பின்னணியில் இருந்தாக சொல்லப்பட்டது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஸ்பிரிங்லர் விவகாரத்தையடுத்து , பினராயி விஜயனுக்கு இப்போது தங்கக் கடத்தல் விவகாரம் பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. கட்சிக்குள்ளும் பினராயி விஜயனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ச்சியாக , பினராயி விஜயன் குற்றச்சாட்டுக்குளாவதால், ‘ தங்கக்கடத்தல் விவகாரத்தை தனித்தே எதிர் கொள்ளும்படி’ மார்க்சிஸ்ட் கட்சி கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பினராயி விஜயன் மேல் அதிருப்தியில் உள்ளது. ஸ்பிரிங்லர் பிரச்னையின் போதே, சிவசங்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்று பினராயி விஜயனுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும், சிவசங்கரை தொடர்ந்து தன் பக்கத்தில் வைத்திருந்தார் பினராயி விஜயன்.

இப்போது தங்கக்கடத்தல் விவகாரமும் வெளிப்பட்டு விட்டதால், ‘பினராயி விஜயன் தனியாக இந்த பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும். கட்சியோ அல்லது இடதுசாரி முன்ணணி கூட்டணியோ பினராயி விஜயனுக்கு எந்த விதத்திலும் உதவியாக இருக்காது .இந்த விவகாரத்தில் அரசை பாதுகாக்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை’ என்றும் கேரள இடதுசாரி முன்னணி கூட்டணி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

தற்போது, இந்த வழக்கை சி.வி.ஐ வசம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும், இது தூதரக தொடர்பான பிரச்னை என்பதால் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தலையீடு இருக்கும். வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருக்கும் வி. முரளிதரன் , வெளிநாட்டிலிருந்து இந்தியர்களை மீட்டு வருவதில் பினராயி விஜயனிடத்தில் கடும் மோதல் போக்கை கடைபிடித்தவர். இருவரும் அரசியல்ரீதியாகவும் எதிரிகள். இதனால், பினராயி விஜயனுக்கு இனி வரும் காலம் கடுமையானதாகவே இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே