சென்னையில் கொரோனா பரவல் குறைந்தது.. 2 மடங்காகும் நாட்கள் அதிகரிப்பு..!

சென்னையில் கொரோனா பரவல் குறைந்து வருவதை உறுதி செய்யும் வகையில், பாதிப்பு 2 மடங்காக எடுத்துக் கொள்ளும் நாள்கள் அதிகரித்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களை விட ஜூன் மாதம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருந்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் பலனாக சென்னையில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது.

ஜூன் மாதம் பாதிக்கு மேல் சென்னையில் தினசரி 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி 1200 முதல் 1500 பேருக்கு மட்டும் கொரோனா கண்டறியப்படுகிறது.

சென்னையில் மார்ச் முதல் ஜூன் 6ம் தேதி வரையிலான காலத்தில் தொற்று பரவல் எண்ணிக்கை இரு மடங்காக உயர எடுத்து கொள்ளும் நாள்கள் சராசரியாக 25 நாட்கள் ஆகின. ஆனால் தற்போது அந்த நாள்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு இருமடங்காக உயர 57.1 நாட்களும், அண்ணா நகரில் 27.4 நாட்களும், தேனாம்பேட்டையில் 32.2 நாட்களும் ஆகியுள்ளன.

தண்டையார்பேட்டையில் 32.7 நாட்களும், கோடம்பாக்கத்தில் 28.8 நாட்களும் எடுத்து கொண்டுள்ளன. இதேபோல் திருவொற்றியூரில் 26.8 நாட்களும், மணலியில் 27.3 நாட்களும், மாதவரத்தில் 31.7 நாட்களும், திரு.வி.க.நகரில் 32.4 நாட்களும், அம்பத்தூரில் 23.2 நாட்களும், வளசரவாக்கத்தில் 22.2 நாட்களும், ஆலந்தூரில் 20.2 நாட்களும், அடையாறில் 24 நாட்களும், பெருங்குடியில் 29.8 நாட்களும், சோழிங்கநல்லூரில் 22.4 நாட்களும் ஆகியுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே