மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட்தேர்வு ரத்து செய்யப்படும் – முதல்வர் நாராயணசாமி

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்றது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, சில மாதங்கள் கழித்து இன்று நடைபெற்ற நிலையில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 மாணவர்கள் அதில் பங்கேற்றனர்.

நாடு முழுவதும் 3000க்கும் அதிகமான தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தது.

நீட் தேர்வு பயத்தால் நேற்று ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, பல அரசியல் தலைவர்கள் நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்துவருகின்றனர். 

அந்தவகையில், இன்று பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் நிராகரித்துள்ளனர்.

மாணவர்கள் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது. தற்போது மாணவர்களும் பெற்றோரும் அவதிப்படுவதை மத்திய அரசு நேரடியாக பார்க்கிறது.

மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் முதலில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில், நீட் தேர்வுக்காக 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மூலக்குளத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திலும் நீட் தேர்வு நடைபெறுவதால், அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே