வருமான வரித்துறையினர் கடந்த வாரம் 3 நாட்கள் நடிகர் சோனு சூட் அலுவலகம், அவரோடு தொடர்புடைய நிறுவனங்களில் ரெய்டு நடத்தினர்.
அதனை தொடர்ந்து வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தெரிவித்து இருந்தது.
அதோடு சோனு சூட் வெளிநாட்டில் இருந்து தனது தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வசூலித்ததிலும் விதிகளை மீறி செயல்பட்டு இருப்பதாகவும், தொண்டு நிறுவனத்திற்கு வசூலித்த நிதியை செலவு செய்யாமல் வங்கியில் போட்டு வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது.
வருமான வரித்துறையினரின் ரெய்டு குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த சோனுசூட் தற்போது சமூக வலைத்தளத்தில் தன் மீதான விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார். அதில், “எப்போதும் உங்களது தரப்பு கருத்தை மட்டும் தெரிவிக்காதீர்கள்.
சோனுசூட் விளக்கம்
காலம் வரும். நான் இதயபூர்வமாக எனது முழு சக்தியையும் பயன்படுத்தி நாட்டு மக்களுக்காக சேவை செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டுள்ளேன். எனது தொண்டு நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற காத்திருக்கிறது. தேவைப்படுபவர்களுக்கு சென்றடையும். சில நேரங்களில் விளம்பர தூதராக இருக்கிறேன். அதில் கிடைக்கும் கட்டணத்தை மனிதாபிமான காரியங்களுக்காக பயன்படுத்துகிறேன். கடந்த சில நாட்களாக சில நண்பர்களை சந்திப்பதில் பிஸியாக இருந்துவிட்டேன். அதனால் நான்கு நாட்களாக உங்களது சேவையில் ஈடுபட முடியவில்லை.
வாழ்நாள் முழுக்க சேவை செய்ய மீண்டும் வந்துள்ளேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். சோனுசூட் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். இதனால் இந்தியா முழுக்க சோனு சூட் பெயர் பிரபலமாகி இருக்கிறது. ஆனால் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து தான் ரெய்டு நடத்தப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது.