என்னய்யா படம் நடிச்சிருக்க: தியேட்டரில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற சூப்பர் ஸ்டார் மனைவி.

தன்னுடைய மிகப் பெரிய விமர்சகர் மனைவி ஜெயா தான் என்று பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் அடிக்கடி கூறுவார்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிகை ஜெயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஸ்வேதா என்கிற மகளும், அபிஷேக் என்கிற மகனும் இருக்கிறார்கள். ஸ்வேதா தன் பெற்றோர் வழியில் நடிக்க வரவில்லை. அபிஷேக் பச்சன் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
ஜெயா பச்சன் மனதில் பட்டதை படக்கென்று பேசிவிடுவார். பொது விஷயங்கள் பற்றி மட்டும் அல்ல தன் கணவரின் படங்களை பற்றியும் மனதில் பட்டதை பேசுபவர் ஜெயா பச்சன். அமிதாப் நடிக்கும் படங்களை பார்த்துவிட்டு வெட்டு ஒன்னு துண்டு இரண்டு என்று கருத்து தெரிவிப்பவர் ஜெயா.
ஒரு முறை அமிதாப் பச்சனின் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த ஜெயா கடுப்பாகி பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டார். இது குறித்து அமிதாப் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

என் மனைவி ஜெயா கடும் விமர்சகர். சில சமயம் ரொம்ப மோசம். படம் ஓடிக் கொண்டிருந்தபோது பாதியில் எழுந்து சென்றிருக்கிறார். நான் நடித்த ம்ரித்யுததா படத்தை பார்த்த ஜெயா அது பிடிக்காமல் பாதியிலே கிளம்பிச் சென்றுவிட்டார். அந்த படம் முழுக்க பார்த்தால் நான் நீ எனக்கு விஸ்வாசமான மனைவி என்று நான் ஜெயாவிடம் கூறியிருந்தேன். அப்படி இருந்தும் முழுப் படத்தை பார்க்காமல் பாதியில் சென்றுவிட்டார்.

அண்மை காலமாக ஜெயா படங்களை பார்க்கும்போது பாதியில் கிளம்பிச் செல்வது இல்லை என்றார்.

அமிதாப் பச்சனுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் கொரோனா அறிகுறி தீவிரமாக இல்லை. இருப்பினும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமிதாப், அபிஷேக் பச்சனை அடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஐஸ்வர்யாவும், ஆராத்யாவும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். ஜெயா பச்சனுக்கு வைரஸ் பாதிப்பு இல்லை.

அமிதாப் பச்சன் குடும்பத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு சொந்தமான நான்கு பங்களாக்களுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மருத்துவமனையில் இருக்கும் அமிதாப் தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்.

தனக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார். லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதில் இருந்து அமிதாப் பச்சன் வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. அபிஷேக் பச்சன் மட்டும் இந்த மாத துவக்கத்தில் ப்ரீத்-இன்டு தி ஷேடாஸ் வெப்தொடருக்கு டப்பிங் பேச ஸ்டுடியோவுக்கு சென்று வந்தார்.

அபிஷேக் மாஸ்க் அணிந்து தான் ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்து அது அபிஷேக் மூலம் அவரின் குடும்பத்தாருக்கு பரவியிருக்கும் என்று பேச்சு கிளம்பியுள்ளது. 77 வயதில் அமிதாப் பச்சன் சிரித்த முகமாக தைரியமாக சிகிச்சை பெற்று வருவது சினிமா ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. பச்சன் குடும்பத்தார் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே