கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே புதுவெங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மானு மனைவி குப்பு. இவருக்கு 5 ஆண் மகன்கள் உள்ளனர். அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
முதல் மகனான பாண்டுரங்கன் (32) கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியர் படித்து வந்தார்.
படிப்பு செலவிற்காக ரிஷிவந்தியத்தில் உள்ள தனியார் வங்கியில் 2018 -19 ஆம் ஆண்டு ரூ. 2 லட்சத்தி 6,300 கல்விக் கடன் பெற்றுள்ளார்.
இதில் 10 ஆயிரம் மட்டும் திருப்பிச் செலுத்தி உள்ளார். 40 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மீதி தொகை கட்டாமல் இருந்ததால் கலெக்ஷன் ஏஜென்ட் பணத்தைக் கட்டச் சொல்லி உள்ளனர்.
மேலும் 3 வருடத்திற்கு ஒருமுறை கடன் தொகையைப் புதுப்பிக்க 2018 ஆம் ஆண்டு கையொப்பம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாண்டுரங்கன் பெங்களூரில் உள்ள அத்தை வீட்டில் தங்கியுள்ளார்.
அப்போது அவரது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.
இதில் கல்விக்கடன் பெற்றுள்ளதாகவும், அதனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் அதனால் மனமுடைந்து சாகப் போவதாகவும் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
அதையடுத்து கடந்த மாதம் 29 ஆம் தேதி இரவு பெங்களூரில் உள்ள அத்தை வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் சொந்த ஊரான வெங்கலம் கிராமத்துக்குக் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
கல்விக் கடன் கட்டமுடியாமல் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

