தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டிடம் மற்றும் ரூ.17.44 கோடி மதிப்பீட்டிலான 11 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 30) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
மேலும், பள்ளிக்கல்வித் துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 17 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 11 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டிடம் (CEmONC) கீழ்தளம் மற்றும் நான்கு தளங்களாக அமைக்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தின் கீழ் தளத்தில், அவசர ஊர்தி மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை, பார்வையாளர்கள் காத்திருப்பு பகுதி, மருந்தகம் மற்றும் மின் அறை ஆகியவைகளும், தரைத் தளத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவப் பிரிவுகள், காத்திருப்பு அறையும், முதல் தளத்தில் அறுவை அரங்குகள், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் பிரசவத்துக்கு பின் கவனிப்பு பிரிவும், இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும், மூன்றாம் தளத்தில் பிரசவத்திற்கு பின் கவனிப்பு பிரிவுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில் சிகிச்சை பெற ஏதுவாக தரைத் தளத்தில் 33 படுக்கைகளும், முதல் தளத்தில் 22 படுக்கைகளும், இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான 95 படுக்கைகளும், மூன்றாம் தளத்தில் 50 படுக்கைகளும், என மொத்தம் 200 படுக்கை வசதிகள் உள்ளன. இதன்மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் தரமான முறையில் உயர்தர சிகிச்சை வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைக் கட்டிடம்; பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டிடம், 2 பெண்கள் கழிவறைக் கட்டிடம், குடிநீர் வசதி மற்றும் சுற்றுச்சுவர்; ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டிடம், 1 அறிவியல் ஆய்வகம், 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் கழிவறைக் கட்டிடம் மற்றும் குடிநீர் வசதிகள்; மாரண்ட அள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைக் கட்டடம், 1 அறிவியல் ஆய்வகம், 2 ஆண்கள் கழிவறைக் கட்டிடம், குடிநீர் வசதிகள் மற்றும் சுற்றுச் சுவர்; இராமகொண்ட அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டிடம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறை, குடிநீர் வசதிகள் மற்றும் சுற்றுச் சுவர்; ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 வகுப்பறைக் கட்டிடம், 1 அறிவியல் ஆய்வகம், 4 கழிவறை கட்டிடம் மற்றும் குடிநீர் வசதிகள், கன்னுகாரம்பட்டி அரசு உயர்நிலை பள்ளியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடம்;
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஏ.ரெட்டி அள்ளியில் 2 கோடியே 26லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகக் கட்டிடம்; கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் முருக்கம்பட்டியில் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டிடம்; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நல்லம்பள்ளியில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டிடம்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் காரிமங்கலத்தில் 1 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆதிதிராவிடர் நலக் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம்;
என, மொத்தம் 17 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 11 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, 100 சதவிகித கரோனா தடுப்பூசி செலுத்தியதற்காக கிருஷ்ணாபுரம், நல்லாசேனஹள்ளி, வெள்ளோலை, கே. நடுஹள்ளி, கடகத்தூர், பூகானஹள்ளி, பொம்மஹள்ளி ஆகிய ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதல்வர் நற்சான்றிதழ்களை வழங்கினார். மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.