தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் ஆளும் அதிமுக கட்சியை விட திமுக கட்சி சற்று அதிகமான இடங்களை கைப்பற்றி இருந்தது.
இதையடுத்து, 27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர், 9624 கிராம ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட 10,306 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் கட்சிகளுக்கிடையே இடையே போட்டி நிலவி வருகிறது.
27 மாவட்டங்களில் இழுபறியாக உள்ள ஒன்றியங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில ஊராட்சிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டு உள்ளார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே இதே சிவகங்கை மாவட்டத்தில், சங்கராபுரம் ஊராட்சிமன்ற தலைவர் பதவியேற்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததால், சங்கராபுரம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் தேர்தலை ரத்து செய்து ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தல் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட ஒன்றாவது வார்டில் சுயேட்சையாக வென்ற ஜானகி என்பவர் கடத்தப்பட்டதாக ஜானகி தரப்பு சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் கரணமாக தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒன்றிய தலைவர் தேர்தலை அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.
பரமத்திவேலூரில் திமுக உறுப்பினர்கள் 4 பேர் வந்த நிலையில் அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் வரவில்லை.
அதிமுக உறுப்பினர்கள் வராத நிலையில், பரமத்திவேலூரில் ஒன்றிய தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.