பீகார் தோல்வி எதிரொலி..; கபில் சிபல் அதிருப்தி..!!

இயல்பில் உள்ள சூழலை காங்., கட்சி ஏற்காவிட்டால், கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகும் என காங்., மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணியிட்டு 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 19 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த தேர்தலில் காங்., 27 இடங்களில் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

காங்., கட்சியின் இந்த சரிவு அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காங்., கட்சியின் செயல்பாடுகள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அளித்த பேட்டி:

காங்கிரஸ் கட்சியில் உள்ள அனுபவமான தலைவர்கள், அனுபவமான மனநிலை உள்ளவர்கள், அரசியல் களச்சூழலை அறிந்தவர்கள் கட்சியை மீள் உருவாக்கம் செய்ய வேண்டும். 

காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்யும் காலம் முடிந்துவிட்டது. நம்மிடம்தான் பதில் இருக்கிறது. துணிச்சலுடன், விருப்பத்துடன் நாம் சரிந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் பல நிலைகளில் பல விஷயங்களைச் செய்ய வேண்டும். குறிப்பாக, கட்சி சார்ந்த விஷயங்கள், ஊடகங்களில் உரையாடுவது, மக்கள் யார் பேச்சைக் கேட்க விரும்புகிறார்களோ அவர்களை நிறுத்துவது, சுறுசுறுப்பான, சிந்தனைமிக்க தலைமைத்துவத்தை வழங்குதல் போன்றவை அவசியம்.

பீஹார் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மோசமாகத்தான் இருந்தது.காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்புரீதியாக என்ன தவறு இருக்கிறது என்பதும் தெரியும். காங்கிரஸ் கட்சிக்கும் அனைத்துப் பதில்களும் தெரியும்.

ஆனால், அவர்கள் அதை ஏற்க விருப்பமில்லை. அனைத்தும் நன்றாக உள்ளன என நினைக்கின்றனர்.

இயல்பில் உள்ள சூழலை அவர்கள் ஏற்காவிட்டால், காங்., கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகும்.

பீஹார் தேர்தல் முடிவைப் பார்த்தபின், இந்த தேசத்தின் மக்கள் காங்., கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை எனத் தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே