சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் முருங்கைக்காய் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையின் காரணமாக காய்கறிகள் விலை கடுமையான அளவுக்கு உயர்ந்தது. குறிப்பாக தக்காளி விலை கிலோ 160 ரூபாய் வரை விற்றது. தக்காளி விலை பொதுமக்களை வாட்டி வதைத்ததால், தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலைக்குத் தக்காளி விற்பனையைத் தொடங்கியது. இதனால் தக்காளி விலை தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு அடுத்த நாளே வெகுவாக குறைந்தது. தற்போது கிலோ தக்காளி 90 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இன்னும் ஐந்து அல்லது ஆறு நாட்களில் தக்காளி விலை 50க்கும் கீழாக குறையும் என்று கூறப்படுகின்ற நிலையில், முருங்கைக்காய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக 180, 200 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுவந்த முருங்கைக்காய், தற்போது சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஏக்கத்தோடு முருங்கைக்காயைப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.