கொரோனா காலகட்டத்தில் திமுகவின் நடவடிக்கைகள் மெத்தனமாக உள்ளது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறித்தும் திமுக ஆட்சியின் கொரோனா நடவடிக்கைகள் குறித்தும் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கொரோனா காலத்தில் மக்கள் கடை பிடிக்க வேண்டிய முறைகளையும் அறிவுறுத்தி இருக்கிறார்.

”மதுரைக்காரன் என்ற அடிப்படையில் அன்போடும் பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள். வீட்டில் இருந்தாலும் கூட விலகி இருந்தால் தான் நல்லது என்று சுகாதாரத்துறை கூறுகிறது அதை கடைபிடியுங்கள்.

பயில்வானாக இருந்தாலும் சரி நோஞ்சானாக இருந்தாலும் சரி அத்தனைபேரையும் கொரோனா பாதித்து வருகிறது.”என்று சொல்லி இருக்கும் செல்லூர் ராஜூ,

”இப்படிப்பட்ட காலத்தில் நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் இன்றும் ரத்தினம் போல் உள்ளது. மக்கள் இன்றளவும் பாராட்டுகின்றனர். ஆனால் திமுக அரசு கொரோனா நடவடிக்கையிலும் மெத்தனமாக இருந்துவருகிறது. மத்திய அரசை குறை சொல்லி விட்டு மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.

திமுக அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் ஆரம்பத்திலேயே திமுக ஆட்சியால் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

திமுக அரசு நோய் தடுப்பு நடவடிக்கையில் வேகம் காட்டவில்லை என்று மக்கள் நினைக்கின்றனர். இந்த ஆட்சியில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

எதிர்காலத்தில் மக்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள். மதுரைக்காரன் வீரமானவன், விவேகமானவன் என்றாலும்கூட அத்தனையும் பேரையும் சுழற்றி வருகிறது. மக்களுக்கு அரசும், மாநகராட்சியும் உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே