திமுகவின் குதறப்பட்ட கூட்டணி தர்மம்..!

  • சாவித்திரி கண்ணன்

தேர்தல் நெருக்கத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களூமே வாக்காளர்கள் மனதில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும். அது தேர்தலின் வெற்றி ,தோல்விகளுக்கு காரணமாகிவிடும்! தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்பிருந்த திமுக கூட்டணியின் இமேஜ் ,கூட்டணி கட்சிகளை அலைகழித்து பலத்த இழுபறிக்குள்ளான நிலையில் சற்று சேதாரமடைந்துள்ளதாகத் தான் தோன்றுகிறது.

திமுகவானது கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சக்திக்கேற்ப தொகுதியை சற்று குறைத்து கொடுக்க முயன்றது தவறல்ல. ஆனால், அதை நடைமுறைப்படுத்திய விதம் பக்குவமற்றது.

உதாரணமாக காங்கிரஸ் விவகாரத்தையே எடுத்துக் கொள்வோம். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக காங்கிரஸ் சென்ற சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் கொடுக்கப்பட்டு எட்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆகவே, இந்த முறை காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகள் தான் திமுக கொடுக்கப் போகிறது என்ற சொல்லாடலை மீடியாவில் இடைவிடாமல் பேசவும், எழுதவுமான ஒரு லாபி நடந்தது. இதன் பின்னணியில், பிரசாந்த் கிஷோரின் ஐபேக்’லாபி’ இருந்தது. காங்கிரஸுக்கு குறைந்த தொகுதிகள் கொடுக்கப்படும் போது அதற்கு தயாரான ஏற்பு மன நிலையை பொதுவெளியில் உருவாக்கவே இப்படி செய்யப்பட்டது. இது முற்றிலும் ஆரோக்கியமற்ற அணுகுமுறை. காங்கிரஸ் என்பது திமுகவுடன் தொடர்ந்து 15 ஆண்டுகளாகப் பழகும் உற்ற அரசியல் தோழமையாகும். திமுகவை தன் அமைச்சரவையில் சேர்த்து முக்கிய பதவிகளை கொடுத்து அதிகாரத்தை பகிர்ந்து கொண்ட காங்கிரசின் இமேஜ் பொதுவெளியில் சரிவதற்கு திமுகவிற்காக வேலை பார்க்கும் ’டீம்’ செயல்பட்டால், அதை திமுக அனுமதித்து இருக்க கூடாது. ஆனால், நிலைமை என்னவென்றால் அந்த கார்ப்பரேட் நிறுவனம் சொல்லியபடி தான் திமுக நடந்து கொள்ள வேண்டும். தானாக சுயமாக எதையும் தீர்மானிக்க கூடாது என்று ஒப்பந்தமாம்!

திமுகவும் கடந்த காலங்களில் படுதோல்வியை சந்தித்துள்ளது 2011 ல் 126 தொகுதிகளில் நின்று வெறும் 23 தொகுதிகளில் தான் வென்றது! அதாவது 103 தொகுதிகளை பறிகொடுத்தது. 2016 தேர்தலிலோ 178 இடங்களில் நின்று சரிபாதி இடங்களில்தோற்று வெறும் 89 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அப்போது அதன் வாக்குவங்கி 22.4% தான்! 2019ல் திமுகவிற்கு மாபெரும் வெற்றி கிடைத்ததற்கு காங்கிரஸின் இமேஜ் மிக முக்கிய காரணமாகும்! காங்கிரஸ் இல்லாமல் திமுகவிற்கு இந்த வெற்றி சாத்தியமில்லை. காங்கிரஸ் ஆதரவுடன் தான் இன்று பாராளுமன்றத்தில் திமுக மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றாக மாறி இருக்கிறது.ஆனால், அப்படிப்பட்ட தோழமையை எவ்வளவு இணக்கத்துடன் அணுகி தொகுதி பங்கீடை நடத்தி இருக்க வேண்டும். சற்றே குறைத்தால் தவறில்லை. 15 தொகுதிகளில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்ததே ஒரு அவமானப்படுத்தும் முயற்சி தானே! இதுவே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் இவ்விதம் நடத்தி இருக்க முடியுமா? அல்லது காங்கிரசை திமுக இப்படி நடத்துவதன் பின்னணியில் பாஜகவின் தூண்டுதல் இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா?

அதே போல கம்யூனிஸ்டுகள் மிகக் குறைந்த வாக்குவங்கி உள்ளவர்கள் தான்! ஆனால், பொதுவெளியில் அவர்கள் மீதான மக்களின் மதிப்பு உன்னதமானது. ஆனால், தனியாக நின்றால், அவர்களுக்கு பெரிதாக ஓட்டுகள் கிடைக்காது! ஏனென்றால், தன் வாக்கு வீணாகிவிடக் கூடாது என்றும், யாரை தாங்கள் தோற்கடிக்க நினைத்தார்களோ, அவர்களை வீழ்த்தமுடியாமல் போய்விடும் என்றும் மக்கள் கருதி ஓட்டை பெரிய கட்சிக்கு போட்டுவிடுவார்கள்! இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், கம்யூனிஸ்டுகளால் தங்களால் தான் அதிக ஓட்டுகளை பெற முடியாதே தவிர, தான் நிற்கும் கூட்டணிக்கு அதிக ஓட்டுகளை வாங்கித் தரமுடியும். இதை நன்கு தெரிந்து தான் கலைஞர் கம்யூனிஸ்டுகளுக்கு உரிய மரியாதையுடன் தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தார்!

இதெல்லாம் பிரசாந்த் கிஷோர் என்ற கார்ப்பரேட்டுக்கு புரிய வாய்ப்பே இல்லை.

இதே போலத் தான் விடுதலை சிறுத்தைகள் பற்றிய இமேஜிம் டேமேஜ் செய்யப்பட்டது! வி.சி.க திமுகவில் இருந்து வெளியேற்றப்படும்.பாமக உள்ளே வரும் என்றெல்லாம் செய்தி பரப்பப்பட்டது. ஒரு நேர்காணலில் பாமக வருவதாக இருந்தால் ’கன்சிடர்’ செய்வோம் என்று கூறியது, விசிகவை வெளியேற்ற எங்களுக்கு தயக்கமில்லை என்பதான் அர்த்தத்தை தான் பொதுவெளியில் தந்தது!

தமிழகத்தில் முஸ்லீம்களின் சதவிகிதம் சுமார் 14% என்கிறார்கள். எஸ்.டி.பி.பி, தமிமுன் அன்சாரியின் மனித நேய மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் ஒரு குடையின் கீழ் இணைத்து அவர்களுக்கு குறைந்தபட்சம் 7% சதவிகித தொகுதிகள் ஒதுக்கினாலே கூட மொத்தம் 17 தொகுதிகள் தர வேண்டும். சரி,அது முடியாது என்றால், 12 தொகுதிகளாவது தந்திருக்கலாம்! ஆனால், கொடுத்தது இது வரை ஐந்து தான்!

ஒரு கட்சி 12 தொகுதிகளில் நின்றால் தான் ஒரே சின்னத்தில் நிற்கமுடியும் என்ற தேர்தல் கமிஷனின் புதியவிதி தெரிந்தும் ம.திமுகவிற்கு 6 தொகுதிகள் மட்டுமே தந்து உதய சூரியன் சின்னத்தில் நிற்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் வேறு கட்சி என்றாலும் சட்டப்படி அவர் திமுகதான்! சட்டசபையில் சுயேட்சையாக செயல்படமுடியாது. கிட்டதட்ட கட்சியை அடமானம் வைத்து வெற்றி பெற்றது போலத் தான் அடுத்த கட்சியின் சின்னத்தில் ஒருவர் போட்டியிடுவது. ஆகவே சிறிய கட்சிகள் ஜீவிக்கவே முடியாத நிலைமைகள் உருவாவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல! சிறிய கட்சிகள் பிரதிநிதிதுவப்படுத்தும் அந்தந்த பிரிவு மக்களின் சுதந்திரமான குரல்கள் சட்டமன்றங்களில் ஒலிக்க வேண்டும். வெவ்வேறு கொள்கைகள் சார்ந்து செயல்படுபவர்களின் சங்க நாதம் சட்டமன்றங்களில் கேட்க வேண்டும்! அது தான் ஜனநாயகத்தின் உன்னதம்! அவர்களை பெரிய கட்சிகள் விழுங்கி ஜீரணிக்கக் கூடாது.

இன்னின்னாருக்கு இவ்வளவு தான் வாக்குவங்கி ஆகவே, அந்த கணக்குப்படி இத்தனை தொகுதிகள் போதும் என்பது அனுபவமில்லாத அரைவேக்காட்டு அறிவுஜீவிகளின் அளவுகோலாகும்! ஒருபெரும் கூட்டணியின் இமேஜ் அதன் இயல்பான வாக்குவங்கியை மிகப் பெரிய அளவில் அதிகரிக்கச் செய்யும்! மக்களை நம்பகத்தன்மையுடன் சுண்டி இழுத்து ஈர்க்கும் வல்லமையை பெற்றுத்தரும்! பாதுகாக்கப்பட வேண்டிய சிறுபான்மையினரான எளிய முஸ்லீம்கள், ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஆகியோரை அரவணைத்து, பெருந்தன்மையுடன் தொகுதி பங்கீடு சற்று கூடக்குறைய நடந்திருந்தால் கூட தப்பில்லை! பலமானவர்கள் தான் பலவீனமானவர்களிடம் விட்டு கொடுத்து செல்ல வேண்டும் என்பது காந்தியடிகள் அடிக்கடி சொல்லியதாகும்!

நடந்திருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது! இனி நடப்பதாவது இந்த தவறுகளை தவிர்த்து நடக்கட்டும்! ஒற்றுமை ஓங்கட்டும்!

  • சாவித்திரி கண்ணன்
  • நன்றி : அறம் இணைய இதழ்

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே