நீட் மனஉளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி குடும்பத்துக்கு திமுக ரூ.5 லட்சம் உதவி

மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா குடும்பத்தினரை அவர்களது சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் உள்ள இல்லத்தில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதிஸ்டாலின் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

குடும்பத்தினருக்கு திமுக சார்பாக ரூ 5 லட்சம் நிதி உதவியும் வழங்கினார்.

அப்போது, மதுரை மாநகர் திமுக பொறுப்பாளர் கோ.தளபதி, மாவட்டச் செயலர்கள் மூர்த்தி, மணிமாறன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல், முன்னாள் மேயர் குழந்தைவேலு முன்னாள் அமைச்சர் தமிழரசி, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான தனுஷ்குமார், விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், இளைஞரணி நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், “நீட் தேர்வால் மருத்துவர் ஆகும் கனவு பலிக்காது என்பதால் தனது உயிரை மாணவி போக்கிக்கொண்டுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறோம். ஏழை மாணவர்கள் மருத்துவம் படிப்பதைத் தடுப்பதுதான் இந்த நீட் தேர்வு.

கலைஞர் இருக்கும்போது நீட் தேர்வு இல்லை. மேலும், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது நீட் தேர்வு முடியாது என்றார்.

ஆனால், தமிழக அரசு தற்போது மத்திய அரசு கூறுவதைக் கேட்கும் அரசாகத்தான் உள்ளது.

மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க இந்த ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநில உரிமைக்குக் கொண்டுவர வேண்டும்.

கடந்த 2 நாள்களுக்கு முன்பும் அரியலூரில் மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்கூட இந்த மாணவி எதற்காக இறந்தார் என்பது இல்லை.

தங்களது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அடிக்கடி டெல்லி செல்கிறார்கள் தமிழக முதல்வரும் அமைச்சர்களும்.

ஆனால் நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசை இவர்கள் வலியுறுத்துவது இல்லை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை கட்டுப்படுத்த டெல்லி சென்று பேசிய அரசு, இப்போது ஏன் நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தாமல் உள்ளது ஏன் என்பது எனது கேள்வி.

மாணவர்கள் நீட் தேர்வை தைரியமாக எழுதுங்கள்.

8 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி. அப்போது நல்ல முடிவு கிடைக்கும். நீட் தேர்வை ரத்துசெய்ய தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்றார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே