ToolKit வழக்கில் கைது செய்யப்பட்ட திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்..!!

டூல் கிட் வழக்கில் சூழலியல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டது.

ரூ. 1 லட்சத்துக்கான இருநபர் உத்தரவாதத்துடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தில்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பான ‘டூல் கிட்’ வழக்கில் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி (21) கடந்த 13-ம் தேதி பெங்களூருவில் வைத்து தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இதையடுத்து, உடன் குற்றம்சாட்டப்பட்டவர்களான நிகிதா ஜேக்கப் மற்றும் ஷாந்தனு முலக் ஆகியோர் பிப்ரவரி 22-ம் தேதி விசாரணை ஆஜராகும்போது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க கோருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, திஷா ரவியின் நீதிமன்றக் காவல் மேலும் 3 நாள்கள் நீட்டிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, அவரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியளித்தது.

இதனிடையே தில்லி நீதிமன்றத்தில் திஷா ரவி ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை கடந்த சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே